Manobala: `கஷ்டப்பட்ட காலத்துல பேருதவி செஞ்சவர் மனோபாலா!' – கலங்கும் இயக்குநர் எழில்

பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா  உடல்நலக்குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்பால்  கடந்த 15 நாள்களாக  சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எல்.வி.பிரசாத் சாலையில் உள்ள அவரது வீட்டில் அவரின் உயிர் பிரிந்திருக்கிறது.

மனோபாலா

`ஆகாய கங்கை’  திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மனோபாலா. தமிழில் 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

மனோபாலாவின் நெருங்கிய நண்பரான இயக்குநர் எழிலிடம் அவரின் மறைவு குறித்துப் பேசினேன். அழுதபடியே பேசத் தொடங்கினார். 
”அவர் இறந்துட்டார்ங்கறதையே நம்ப முடியல. அதிர்ச்சியாக இருக்கு. எனக்கொரு அண்ணனா, காட்ஃபாதரா அவர் இருந்திருக்கார். எங்க ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் அவர். நான் உதவி இயக்குநரா இருந்த காலத்தில் இருந்து அவரோட நட்பு கிடைச்சது. அவர்கிட்ட நான் கத்துக்கிட்ட விஷயங்களை விட, பிரமிச்ச விஷயங்கள் தான் அதிகம். அவரோட காரை எடுத்துட்டு என் வீட்டுக்கே வந்துடுவார். ‘அங்கே போயிட்டு வரலாம்.. அவரை சந்திப்போம்.. இவரை பார்த்துட்டு வருவோம்..’னு எப்பவும் உற்சாகமா இருப்பார். எதையும் ‘மாட்டேன்’னு சொல்லாதே. ‘சரினு சொல்லு.. வந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதே’ன்னு சொல்வார். சமீபத்தில் தான் அவர் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே புது அலுவலகம் திறந்தார். அவரோட ஆபீஸின் முதல் நாள் என்னையும் அழைச்சிருந்தார். ‘இங்கிருந்து பாருடா.. கோயம்பேடே தெரியுது. நீ இங்கிருந்தே சீன்களை எழுதலாம்.. கதையை எழுதலாம் என அன்பாகச் சொன்னார்.

நான் நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை கூட எனக்கு சாத்தியமாக்கினார். ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் பார்த்துட்டு அவர்கிட்ட பேசினேன். ‘நீ மணி சார்கிட்டேயும் பேசுன்னு சொல்லி அவர்கிட்டேயும் பேச வச்சார். சில வருஷத்துக்கு முன்னாடி நான் படமில்லாமல், பணமில்லாமல் கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். அந்த டைம்ல என் வீட்டுக்கு வந்தவர், என்னை பார்த்த விநாடியே ‘அந்த சிரீயல்ல உனக்கொரு பேங்க் மேனேஜர் கேரக்டர் இருக்குன்னு சொல்லி பெரிய தொகையை கையில் கொடுத்தார். காலத்தினால் செய்த உதவி பேருதவியா இருந்துச்சு. ஒரு மனுஷனால எல்லார்கிட்டேயும் நட்பா இருக்க முடியாது என்பதைப் பொய்யாக்கியவர் அவர்.

மனோபாலா

இன்றைய இளம் இயக்குநர்கள் வரை அத்தனை பேரிடமும் அவர் நட்பு பாராட்டுவார். ரெண்டு நாள்களுக்கு முன்னாடி என்னோட அடுத்த படத்துல அவருக்கு டி.எஸ்.பி. கேரக்டர் இருக்குது என் மனைவிகிட்ட சொல்லிட்டு இருந்தேன். அந்த படத்தை துவங்க  எப்படியும் இரண்டு மாதம் ஆகும். அதற்குள் அவர் நலம் பெற்று வந்திடுவார்னு எண்ணினேன். அவரோட இழப்பு என் குடும்பத்துல ஒரு இழப்பாகிடுச்சு.” கண்களில் ஈரமாக.. குரல் உடைந்து பேசினார் எழில்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.