சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார்.
கல்லீரல் பாதிப்பு காரணமாக தனது 69வது வயதில் மறைந்த மனோபாலாவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அஜித் குறித்து மனோபாலா பேசிய வீடியோ ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
அதில், அஜித் குறித்து மனோபாலா பேசியதை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.
அஜித்தை நினைத்து உருகிய மனோபாலா:40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. ஆனால், இன்றைய ரசிகர்களால் காமெடி நடிகராகவே அதிகம் அறியப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா, இன்று உயிரிழந்தார். மயில்சாமியைத் தொடர்ந்து மனோபாலாவும் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நடிகர்கள், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், மனோபாலாவின் திறமைகள் குறித்து யாரும் அறிந்திடாத பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதேநேரம் அஜித் குறித்து நடிகர் மனோபாலா பேசிய வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது பைக் டூரில் பிஸியாக உள்ளார். விரைவில் தனது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில், அவரைப் பற்றி மனோபாலா மிக உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசியுள்ளார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு மனோபாலா பேட்டிக் கொடுத்திருந்தார்.
அப்போது அவரிடம் நடிகர் அஜித் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள மனோபாலா, தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளவும், இந்த நிலைக்கு வருவதற்காகவும் அஜித் பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும். சும்மா ஏத்திக்கொண்டு போய் அவர மேல வைக்க நாங்க முட்டாள் இல்லை. அஜித் அவ்ளோ கஷ்டப்பட்டார், அவருக்கு வந்த வேதனையும் சோதனையும் உலகத்துல வேறு எந்த நடிகனும் பட்டுருக்கவே மாட்டான் எனக் கூறியுள்ளார்.
மேலும், பைக் ரேஸ் விபத்துகளால் அஜித் நடக்கவே முடியாமல் இருந்தபோதும், அதிலிருந்து மீண்டுவந்து ஆக்ஷன், டான்ஸ் என எல்லாவற்றிலும் கலக்கினார். யாருடைய உதவியும் இல்லாமல் தன்னைத் தானே செதுக்கிக்கொண்டார். அப்படித்தான் அஜித் மேலே வந்ததாக மனோபாலா பேசியது, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனோபாலா பேசிய இந்த வீடியோவை ஷேர் செய்து அஜித் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.