Manobala Passed Away – நேற்றுகூட வீடியோ போட்டிருந்தாரே.. மனோபாலாவின் கடைசி பேட்டி

சென்னை: Manobala Passed Away (மனோபாலா உயிரிழந்தார்) இயக்குநரும் நடிகருமான மனோபாலா இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் நேற்றுகூட அவரது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை அப்லோடும் செய்திருந்தார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக இணைந்தவர் மனோபாலா. கமல் ஹாசன் செய்த பரிந்துரையாலும், மனோபாலாவுக்கு இருந்த திறமையாலும் அவரை உதவி இயக்குநராக இணைத்துக்கொண்டார் பாரதிராஜா. முதல் படத்திலேயே அவரது திறமையை புரிந்துகொண்ட பாரதிராஜா தன்னிடம் நெருங்கி பழகும் உதவி இயக்குநர்களில் ஒருவராக அவரை அணுக வைத்தார். இதன் காரணமாக பாரதிராஜாவின் முதன்மை சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

இயக்குநராக மனோபாலா: டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த மனோபாலா 1982ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, சிறை பறவை, தூரத்து பச்சை, ஊர்க்காவலன் என தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இயக்குநராக தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

நடிப்பில் அசத்திய மனோபாலா: இயக்கம் மட்டுமின்றி அவர் உதவி இயக்குநராக இருந்தபோதே சிறு சிறு வேடங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றன. இயக்கத்திற்கான வாய்ப்பு குறைந்ததை அடுத்து முழு நேர நடிகராக மாறினார் மனோபாலா. அப்படி அவர் நடித்த பிதாமகன், பேரழகன், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என ஏராளமான படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அவரது இயல்பான நடிப்பும், உடல்மொழியும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது.

தயாரிப்பாளர்: இயக்குநர், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அசத்தியவர் மனோபாலா. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வரும் ஹெச்.வினோத்தை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் மனோபாலாதான். சதுரங்க வேட்டை போன்ற சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டை அதுவும் ஒரு புதுமுக இயக்குநரை நம்பி பணம் போடும் தைரியம் மனோபாலாவுக்கு இருந்ததை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டே ஆச்சரியப்பட்டது.

மாற்றிக்கொண்ட மனோபாலா: தற்போதைய காலம் யூட்யூப் காலம் ஆகிவிட்டதை உணர்ந்துகொண்ட மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற யூட்யூப் சேனலை தொடங்கி சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். அதுமட்டுமின்றி தனது அனுபவங்களையும் சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய பாணியில் பகிர்ந்துகொள்வதும் ரசிக்கும்படி இருக்கும்.

அவர் எடுத்த கடைசி பேட்டி: இப்படி பல துறைகளில் ஆளுமையாக இருந்த மனோபாலா கல்லீரல் பிரச்னை காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் அவர் தனது யூட்யூப் சேனலில் கடைசியாக நடிகை கோவை சரளாவை பேட்டி எடுத்திருக்கிறார். அந்த வீடியோ நேற்றுதான் (18 மணி நேரத்திற்கு முன்பு) அவரது யூட்யூப் சேனலில் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது.

 Manobala Passed Away - he had last interviewed actress Kovai Sarala for his waste paper youtube channel

அந்தப் பேட்டியில் இரண்டு பேருமே சகஜமாக பேசிக்கொண்டனர். அந்த வீடியோவை பார்க்கையில் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதுபோன்ற எந்த உணர்வையும் அவர் காட்டிக்கொள்ளவே இல்லை என சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.