நியூயார்க்: Priyanka Chopra (ப்ரியங்கா சோப்ரா) நேற்று நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்வில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த வைர நெக்லஸின் விலையை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றனர்.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் வருடா வருடம் மே 1ஆம் தேதி மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். மாலை தொடங்கி நள்ளிரவுவரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் புதுமையான உடைகள் அணிந்தபடி ரெட் கார்ப்பெட்டில் வலம் வருவார்கள். ஒரே நிகழ்ச்சியில் உலக நாடுகளின் பிரபலங்கள் சங்கமிப்பதால் இந்நிகழ்ச்சியை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
களை கட்டிய மெட் காலா 2023: ஆண்டுதோறும் தவறாமல் நடக்கும் இந்த நிகழ்ச்சி கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு மட்டும் நடைபெறவில்லை. இந்தச் சூழலில் 2023ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.. டிசைனர் கார்ல் லாகர்ஃபெல்ட்டிற்கு அஞ்சலி என்ற கருப்பொருளோடு இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி தொடங்கியது. அதேசமயம் இதற்கான டிக்கெட் விலை, இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாயிலிருந்து 41 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டதால் சில பிரபலங்கள் கலந்துகொள்ளவில்லை.
மெட் காலாவில் இந்திய பிரபலங்கள்: மெட் காலா 2023 நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து ப்ரியங்கா சோப்ரா, ஆலியா பட், முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி கலந்துகொண்டனர். ப்ரியங்கா சோப்ரா, இஷா அம்பானி உள்ளிட்டோர் இதற்கு முந்தைய மெட் காலாவில் கலந்துகொண்டனர். ஆனால் ஆலியா பட் கலந்துகொள்ளும் முதல் மெட் காலா நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட் கார்ப்பெட்டில் ப்ரியங்கா சோப்ரா: ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் கலந்துகொண்டார். ப்ரியங்கா சோப்ரா கறுப்பு நிற வாலண்டினோ உடையிலும், நிக் ஜோனாஸ் கறுப்பு நிற கோட் சூட்டிலும் அசத்தலாக என்ட்ரி கொடுத்தனர். சில வருடங்களுக்கு முன்பு நடந்த மெட் காலாவில் ப்ரியங்கா சோப்ராவின் உடையும், ஹேர் ஸ்டைலும் மிகக்கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹைலைட்டான நெக்லஸ்: ப்ரியங்கா சோப்ரா நேற்று அணிந்து வந்திருந்த உடையை விட அவர் அணிந்திருந்த நெக்லஸ் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் எந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது, அதன் விலை எவ்வளவு என்பது குறித்தும் ரசிகர்கள் ஆராய்ச்சியில் இறங்கினர். இந்தச் சூழலில் அவர் அணிந்திருந்த நெக்லஸ் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
பல்கேரியா நெக்லஸ்: அதாவது, ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் பல்கேரி நிறுவனத்தின் 11.6 காரட் வைர நெக்லஸ் என கூறப்படுகிறது. அந்த நெக்லஸில் ப்ளூ லகுனா வைரம் பதிக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், அந்த நெக்லஸ் மிகவும் விலை உயர்ந்ததாம். இந்திய மதிப்பில் 204 கோடி ரூபாய் அந்த நெக்லஸ் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.