சென்னை : கல்யாணமே வேண்டாம் என்று பிரேம்ஜி அடம் பிடிப்பதாக அவரது தந்தை கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி ரோலில் நடித்து அசத்தி இருந்தார்.
நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி : சென்னை 28 படத்துக்கு பிறகு சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்தார். மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, தனது சகோதரனான வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தது.
முரட்டு சிங்கிள் : 43 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் கூறியிருந்தார். ஆனால், பிரேம்ஜியோ இனி கல்யாணமே கிடையாது நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் என்று சோஷியல் மீடியாவில் கூறியிருந்தார்.
கங்கை அமரன் பேட்டி : இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன், எனது வாழ்க்கையில் கடவுள் எந்த குறையும் வைக்கவில்லை, அன்பான பசங்க என என் வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டு இருக்கிறது. என் மனைவி கடந்த ஆண்டு இறந்தது தான் எனக்கு மிகப்பெரிய கவலையே, எப்போதும் பசங்களை பற்றித்தான் யோசித்துக்கொண்டே இருப்பார்.
கல்யாணமே வேண்டாம் : பிரேம்ஜிக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது என் மனைவியின் ஆசை, கல்யாணத்தை பற்றி பிரேம்ஜியிடம் பேசினால், எனக்கு கல்யாணமே வேண்டாம், வர மனைவிக்கு புடவை வாங்கிக் கொடுத்துக்கொண்டு, குழந்தைகளை வளர்த்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது, நான் இப்படியே இருக்கிறேன் என்கிறார். நானும், என் மகன் பிரேம்ஜியும் ஒரே வீட்டில் இருக்கிறோம் என்னை மிகவும் அன்பாக பிரேம்ஜி கவனித்துக்கொள்கிறார் என்று கங்கை அமரன் பேட்டியில் கூறினார்.