ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சரத்பாபு.
கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் நடிகர் சரத்பாபு தற்போது உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அது வதந்தி எனவும் சரத்பாபு நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
நடிகர் சரத்பாபு ஹெல்த் அப்டேட்: தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சரத்பாபு. கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது.
ஆனால், சரத்பாபு உயிரிழந்ததாக வெளியான செய்தி வதந்தி என அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர். சரத் பாபுவின் பிஆர்ஓ மூலம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரத்பாபுவின் உடல்நலன் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவர் முன்பை விட ஹெல்தியாக இருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதனால் சரத்பாபுவின் மறைவு குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என தெரியவந்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் இயக்குநரும் நடிகருமான மனோபாலா உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது சரத்பாபுவும் உயிரிழந்துவிட்டாரா என ரசிகர்கள் பதைபதைத்து வந்தனர். ஆனால், அது உண்மையில்லை என தெரிந்ததால் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
நிழல் நிஜமாகிறது திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான சரத்பாபு, முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, லவ் பேர்ட்ஸ், ஆளவந்தான், பாபா, பாரிஜாதம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக பெரும்பாலானா படங்களில் ரஜினியின் நண்பராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முள்ளும் மலரும் தொடர்ந்து அண்ணாமலை, முத்து திரைப்படங்கள் வரை ரஜினியின் நண்பராக நடித்து பிரபலமானவர். இவரது அடர்த்தியான குரல் வளத்துக்காகவே மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரையுலகில் பயணித்து வருகிறார் சரத்பாபு.