கீவ்,
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 435-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
இதனிடையே, ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லின் மீது நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய டிரோன்களை அதிபர் மாளிகை பாதுகாப்பு அமைப்பான லேசார் ஆயுதம் சுட்டு வீழ்த்தியது.
இந்த தாக்குதல் சம்பவம் அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் மேற்கொண்ட முயற்சி என்றும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்தது. மேலும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷியா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ரஷிய அதிபர் மாளிகை மீது டிரோன் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று அதிரடி நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ் மீதும் கர்சன் நகர் மீதும் ரஷியா அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதியது.
கர்சன் நகர் மீது ரஷியா ஏவிய ஏவுகணைகள் ரெயில்நிலையம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டை தாக்கின. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர். கீவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
அதிபர் மாளிகை மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில் அந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷியாவின் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது.