அரசியலுக்கு வராமலேயே ஆந்திர அரசியலிலும் ரஜினியின் தாக்கம்

அமராவதி: மறைந்த பழம்பெரும் நடிகர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். விழாவில் ரஜினியின் பேச்சுதான் தற்போது வரை ஆந்திராவில் ‘ஹாட் டாபிக்’ ஆக உள்ளது.

இதில் ரஜினி பேசும்போது, “என்.டி.ராமாராவ் ஒரு யுக புருஷர். அவர் திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே மக்களுக்கு பணியாற்ற அரசியலில் கால் பதித்து, கட்சியை தொடங்கிய 9 மாதத்தில் ஆட்சியை பிடித்தவர். ‘டைகர்’ எனும் தெலுங்கு திரைப்படம் 1977-ல் வெளிவந்தது. இதில் என்.டி.ஆருடன் நடித்திருந்தேன். அந்த காலகட்டத்தில் சில கெட்ட பழக்கங்களுக்கு ஆளானேன்.

இதனால் எனக்கு அதிகம் கோபம் வரும். சிலரை அடிக்கவும் சென்றுள்ளேன். இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் சிலர் கொடுத்த அட்வான்ஸை கூட திரும்ப வாங்கிக்கொண்டனர். இதனால் படங்கள் குறைந்தன. ஆனால், டைகர் படத்தில் ரஜினிதான் நடிக்க வேண்டும் என என்.டி.ஆர் கண்டிப்புடன் கூறி என்னை நடிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து பல படவாய்ப்புகள் எனக்கு வந்தன” என என்டிஆரை நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து ரஜினி பேசும்போது, “சந்திரபாபு நாயுடுவுடன் எனக்கு சுமார் 30 வருடங்களுக்கு மேல் பழக்கம். அவரின் தொலைநோக்கு பார்வை என்னை பிரம்மிக்க வைக்கிறது. 1996-ல் அவருடன் பேசும்போது, 2020 தொலைநோக்கு திட்டம் குறித்து பேசினார். ஹைதராபாத்தை ஒரு ஹை-டெக் சிட்டியாக மாற்றி அமைக்கவேண்டும் என அவர் நினைத்தார். சமீபத்தில் ஜெயிலர் படப்பிடிப்புக்காக நான் ஹைதராபாத் சென்றபோது மிகவும் வியப்படைந்தேன். இது நியூயார்க் நகரமா? அல்லது ஹைதராபாத்தா? என ஆச்சர்யப்பட்டேன். அப்படி ஒரு வளர்ச்சி அங்கு நிகழ்ந்துள்ளது. இது சந்திரபாபு நாயுடுவுக்கே சாத்தியம். தற்போது கூட 2047 தொலைநோக்கு திட்டத்தை அவர் எனக்கு விளக்கினார்.
இது நடந்தால், ஆந்திரா இந்தியாவின் நம்பர் -1 மாநிலமாக திகழும்” என்று சந்திரபாபு குறித்து புகழாரம் சூட்டினார்.

இதைத்தொடர்ந்து மேடையில் இருந்த நடிகர் பாலகிருஷ்ணா குறித்தும் ஓரிரு வார்த்தைகள் பேசினார். தெலுங்கிலேயே அமைந்த ரஜினியின் பேச்சை ஆந்திர மக்கள் கைதட்டி, விசிலடித்து ரசித்தனர்.

ரஜினி மீது ரோஜா பாய்ச்சல்: ரஜினியின் இந்தப் பேச்சால் ஆந்திராவில் ஆளும் ஜெகன்மோகன் கட்சி யினர் கொந்தளித்து போயினர். இதில் அமைச்சர் ரோஜாதான் முதன்முதலாக ரஜினியை விமர்சித்தார். “விழாவுக்கு வந்தோமா, புத்தகத்தை வெளியிட்டோமா, சென்றோமா என்றிருக்க வேண்டும். அதை விடுத்து தெரியாத அரசியலை ரஜினி ஏன் பேசினார்? ஆந்திர அரசியல் குறித்து ரஜினிக்கு என்ன தெரியும்? என்.டி.ஆரின் முதுகில் குத்தி ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவை ரஜினி புகழ்ந்து பேசுவதா? கடந்த 20 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி ஹைதராபாத்தில் இல்லை. அப்படி இருக்க இவர் எப்படி ஹைதராபாத்தை நியூயார்க் போல் வளர்ச்சி அடையச் செய்திருக்க முடியும்? ரஜினி ஹீரோ அல்ல ஜீரோ” என்றார்.

ரோஜாவை தொடர்ந்து காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி, முன்னாள் அமைச்சர் அம்பட்டி ராம்பாபு என ரஜினியை ஜெகன் கட்சியினர் தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினர். ரஜினி குறித்தே ஆந்திர அரசியலில் பேச்சாக மாறியது. விழாவில் ஆந்திர அரசியல் பற்றியும், முதல்வர் ஜெகன் பற்றியும் ரஜினி எதுவும் பேசாத நிலையில் அவரை ஜெகன் கட்சியினர் எதிர்ப்பது ஏன்? அரசியல் விளம்பரம் தேடிக்கொள்ளவா என்றெல்லாம் கேள்வி எழுந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா கூறும்போது, “ஆந்திர அரசியல் தெரியாமல் ரஜினி பேசியதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் ரோஜாவுக்கு ஆந்திர அரசியல் தெரியும் அல்லவா? அப்போது அவர் ஏன் தெலுங்கு தேசம் கட்சியில் முதலில் கால் பதித்தார்? என்டிஆர் முதுகில் சந்திரபாபு நாயுடு குத்தியது அப்போது ரோஜாவுக்கு தெரியாதா? ரஜினி ஒரு மகா நடிகர். அதற்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர். அவரை தேவையில்லாமல் அரசியல் லாபத்திற்காக விமர்சிக்க கூடாது. இந்த விஷயத்தில் ரோஜா இனியாவது தனது வாய்க்கு பூட்டு போட்டுக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழர்களின் வாக்கு சிதறுமா?: ஆந்திர மாநிலத்தில், தமிழக எல்லையில் சித்தூர், திருப்பதி ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளன. இதில் நகரி தொகுதியில் தான் அமைச்சர் ரோஜா வெற்றி பெற்று, தற்போது அமைச்சராக உள்ளார். இந்த தொகுதியில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். ரஜினி மீதான விமர்சனம் வரும் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதை அமைச்சர் ரோஜா மறந்து விடக்கூடாது என அவரது தொகுதி மக்களே கூறுகின்றனர்.

இதேபோன்று ஸ்ரீ காளஹஸ்தி யிலும் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்குள்ள எம்எல்ஏவுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என்றும் சிலர் தெரிவித்தனர். நகரி, காளஹஸ்தி மட்டுமல்லாது, சித்தூர், திருப்பதி மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் தமிழர்கள், ஜெகன் கட்சிக்கு எதிராக திரும்புவார்கள் எனவும் பேச்சு அடிபடுகிறது. மேலும், ரஜினியின் தாக்கம் ஆந்திரா முழுவதும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.