இந்தியாவில் நடைபெறும் பயிற்சி கற்கைநெறிகளில் கலந்து கொள்ளும் இலங்கை பாதுகாப்பு படையினரின் தொழில்முறை தரத்தை இந்திய விமானப்படைத் தளபதி பாராட்டினார்.
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி. ஆர்.சௌதாரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை (மே 03) சந்தித்தார்.
கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய உறவுகளை குறிப்பிட்டுக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட சமயத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெறும் பயிற்சி கற்கைநெறிகளில் கலந்து கொள்ளும் இலங்கை பாதுகாப்பு படையினரின் தொழில்முறை தரத்தை இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் சௌதாரி அவர்கள் இதன்போது பாராட்டினார்.
மேலும், குறிப்பாக பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க புதிய வழிமுறைகள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர மற்றும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூத் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.