சென்னை: உலக பத்திரிகை சுதந்திர நாளில், பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுபடி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர நாளில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘ஜனநாயகத்தின் தூண்களாகவும் மனித உரிமைகளின் பாதுகாவலர்களாகவும், அரும்பணி ஆற்றிவரும் பத்திரிகையாளர்களின் கருத்துச் சுதந்திர தினத்தில் அவர்களின் அர்ப்பணிப்புக்கும், சில ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும் மீறி நடுநிலை தவறாது சேவையாற்றி வரும் அவர்களின் நல்லறத்துக்கும் எனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.