இம்பால்: “என் மாநிலம் பற்றி எரிகிறது. உடனடியாக உதவுங்கள்” என்று பிரதமர் மோடியிடம் எம்.பியும், குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம் கோரிக்கை வைத்துள்ளார்.
மணிப்பூரில் அதிகம் வசிக்கும் மெய்தி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புதன்கிழமை மணிப்பூர் அனைத்து மாணவர்கள் அமைப்பு (ஏடிஎஸ்யூஎம்) பழங்குடியினர் அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதேநேரத்தில் ஒருநாள் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள 10 மலை மாவட்டங்களில் புதன்கிழமை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பழங்குடிகளுக்கும் – பழங்குடிகள் அல்லாத பிரிவினருக்கும் இடையில் வன்முறை ஏற்பட்டது. வன்முறை நிகழ்ந்ததைத் தொடர்ந்து மாநில அரசு 5 நாட்களுக்கு இணையச் சேவையை முடக்க உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 114 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரில் நிகழும் வன்முறை குறித்து எம்.பியும், 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவருமான மேரி கோம் வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, “என் மாநிலம் (மணிப்பூர்) பற்றி எரிகிறது. உதவுங்கள்… மாநிலத்தில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசையும், மத்திய அரசையும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவே எனது வேண்டுகோள்.
நான் அனைத்து மக்களையும் மதிக்கிறேன். ஏன் நாம் அனைவரும் அமைதியாக வாழ முடியாது? இந்த வன்முறையில் துரதிருஷ்டவசமாக சிலர் உயிரிழந்தனர். கூடிய விரைவில் இவை எல்லாம் முடிவுக்குவர வேண்டும். எல்லாம் சரியாகிவிட இறைவனை வேண்டுகிறேன். மணிப்பூரில் நிலவும் நிலை என்னை கவலையடைச் செய்கிறது… இதற்கு முன் இவ்வளவு வன்முறையை நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை” என்று மேரி கோம் பேசியுள்ளார்.