திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக சேரன் மகாதேவி சார் ஆட்சியர் சபீர் ஆலம் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்களிடம் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா 2 கட்டங்களாக விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேதநாராயணன், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆகியோர் அளித்த புகார்களின் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மற்றும் சில போலீஸார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே ஒரு வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக,நாளை (5-ம் தேதி) விசாரணைக்கு ஆஜராக 7 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.