புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) பிளவிற்கு அஜித் பவார் முயன்ற நிலையில், அதனை. தனது ராஜினாமா கடிதம் மூலம் தடுத்த தலைவர் சரத் பவாருக்கு வெற்றி கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மகராஷ்டிராவில் மக்களவை 48 , சட்டப்பேரவை 288 தொகுதிகள் உள்ளது . மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தின் பங்கு கணிசமாக உள்ளது. இதன் காரணமாக, மத்தியில் ஆட்சி அமைக்க முயலும் கட்சிகள் பார்வையில் இம்மாநிலம் முக்கிய இடத்தைப் பிடிப்பது வழக்கம்.
இந்தவகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கும் (தேஜமு) மகராஷ்டிரா, ஒரு முக்கிய மாநிலம். கடந்த 2019 தேர்தலில் தேஜமுவின் உறுப்பினர்களான சிவசேனாவிற்கு 19, பாஜகவிற்கு 23 கிடைத்தன.
மகராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா, பாஜகவிற்கு இடையே யார் ஆட்சி அமைப்பது? என்பதில் சிக்கல் எழுந்தது. இடையில் புகுந்த என்சிபியின் தலைவர் சரத்பவார், மகா விகாஸ் அகாடி எனும் பெயரில் ஒரு புதிய கூட்டணி அமைத்தார்.
அதில், தம் கட்சியுடன் எதிர்முனைகளான சிவசேனா, காங்கிரஸை இணைத்து ஆட்சி அமைத்தார். இதனால், மகாராஷ்டிராவில் வலுவிழந்த பாஜகவிற்கு உதவியாக வந்தார் ஏக்நாத் ஷிண்டே.
சிவசேனாவின் மூத்த தலைவரான ஷிண்டே தலைமையில் பிளவுபட்ட சிவசேனாவுடன் இணைந்து பாஜக கடந்த வருடம் ஆட்சி அமைத்தது. இந்த பிளவின் மீதான ஒரு கட்சி தாவல் சட்ட வழக்கில் விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாக உள்ளது.
இதில், முதல்வர் ஏக்நாத்திற்கு சிக்கல் வந்தால் சமாளிக்கவேண்டிய நிலை பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக, பாஜகவின் தூண்டிலில் சரத்பவார் கட்சியின் முக்கியத் தலைவரும் அவரது சகோதரர் மகனுமான அஜித்பவார் சிக்கியதாகத் தெரிகிறது.
இவரால் என்சிபியில் பிளவு ஏற்பட்டு அஜித்பவார் தலைமையில் பாஜக ஆட்சி தொடரும் எனவும் பேச்சுக்கள் எழுந்தன. இதை சமாளிக்க சரத்பவார் எழுதிய ராஜினாமா கடிதம், அம்மாநிலத்தின் அரசியல் சூழலை திசை திருப்பி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரான சரத்பவாரின் தலைவர் பதவி ராஜினாமாவால் என்சிபியினர் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டனர். இக்கடிதத்தை வாபஸ் பெறச் செய்வதில் தொண்டர் முதல் அனைத்து தலைவர்களும் இறங்கி விட்டனர்.
இச்சூழலில், தனது பிளவு அரசியலை அஜித் பவாரால் தொடர முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையை அடுத்த வருடம் மக்களவை தேர்தல் வரை நீட்டித்துவிட்டால், தம் கட்சியின் பிளவை காத்துவிடலாம் என சரத்பவார் கருதுவதாகத் தெரிகிறது.
ஏனெனில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக என்சிபியில் ஏற்படும் பிளவு மட்டுமே, அதன் முடிவுகளை பாஜகவிற்கு சாதகமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. இப்பிளவால், பாஜகவிற்கு மீண்டும் கணிசமானத் தொகுதிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் என்சிபி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘கட்சியின் பிளவை தடுக்கவே சரத்பவார் தம் ராஜினாமா நாடகத்தை துவக்கினார். இன்னும் சில நாட்களில் அதை வாபஸ் பெறுவார் அல்லது பெயரளவில் ஒரு செயல் தலைவரை அமர்த்தி கட்சியை தானே நடத்துவார்.
இந்த புதிய பதவி அவரது ஒரே மகளான சுப்ரிய சுலே அல்லது அஜித் பவாருக்கு கிடைக்கும். ஒரு சிறந்த எம்.பி.,யாக இருந்தாலும் தன்னை தலைவர் தகுதிக்கு சுப்ரியா உயர்த்திக்கொள்ள மேலும் சில காலம் தேவைப்படுகிறது.’ எனத் தெரிவித்தனர்.
அரசியலில் பீஷ்மர் எனப்படும் சரத்பவார் ராஜினாமாவால், அதன் மீதான ஆலோசனைகள் மட்டுமே தற்போது மகராஷ்டிரா அரசியலில் முன்னணி வகிக்கின்றன. இதனால், மக்களவை தேர்தலிலும் பாஜக, மகா விகாஸ் அகாடி கூட்டணியை எதிர்கொள்ளவேண்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.