கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் தொல்லை – வாலிபர் போக்ஸோவில் கைது.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ஆஷிக். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது ஆஷிக்கிற்கும், கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
சில நாட்களிலேயே நெருங்கி பழகிய இவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து நட்பை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆஷிக் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் செல்போன் எண் சிக்னலை ஆய்வு செய்துள்ளனர்.
அதில், மாணவியின் செல்போன் கடைசியாக இயங்கிய இடம் ஆஷிக் வீடு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்துகொண்டிருக்கும் போது மாணவி சென்னித்தோட்டம் பகுதியில் நிற்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தியதில், ஆஷிக் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடைய வீட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு அறையில் என்னை அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார். அதன் பிறகு என்னை சென்னித்தோட்டம் பகுதியில் விட்டுவிட்டு சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஆஷிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்த நிலையில் சென்னித்தோட்டம் பகுதியில் நண்பர்களுடன் இருந்த ஆஷிக்கை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.