கேரள மாநிலம், விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த முகமது நஜீப் – சுஜிதா தம்பதியின் மகன் ஆதில் முகமது(12). கேரளாவில் ஆறாம் வகுப்பு படித்துவந்த ஆதில் முகமது, 2022-ம் ஆண்டு மே மாதம் கோடை விடுமுறையில் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையிலுள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்குத் தாயுடன் வந்திருந்தார். மே மாதம் 6-ம் தேதி திடீரென்று மாயமான ஆதில் முகமது, மே 8-ம் தேதி திட்டுவிளை அருகே மணத்திட்டை நந்திரிக்குழி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். ஆதில் முகமதுவின் மரணத்துக்கு திட்டுவிளைப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன்தான் காரணம் எனவும், அந்தச் சிறுவன் ஆதில் முகமதுவைக் குளத்துக்கு அழைத்துச் சென்றபோது மரணம் ஏற்பட்டதாலும், அவன்மீது தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும்படி அந்தப் பகுதி மக்கள் திட்டுவிளைச் சந்திப்பில், சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆயினும், மரணம் தொடர்பான மர்ம முடிச்சு அவிழாத நிலை தொடர்ந்தது.
இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து, ஆதில் முகமதுவின் பெற்றோர் தங்கள் மகனின் மரணம் தொடர்பாக உண்மையான காரணத்தை கண்டறிய கோரி மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஆதில் முகமது மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும் என பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து சிறுவன் ஆதில் முகமது மரணம் தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில், மீண்டும் விசாரணை தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. ஆதில் முகமதுவை அழைத்துச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவனிடம் தொடர்ந்து விசாரித்ததோடு, சம்பவம் நடைபெற்ற குளத்துக்கும் சிறுவனை அழைத்துச் சென்று விசாரித்தனர். காணாமல்போன அன்று ஆதில் முகமது டி-ஷர்ட் அணிந்திருந்தார். ஆனால், சடலமாக மீட்கப்படும்போது டி-ஷர்ட் உடலில் இல்லை. எனவே, ஆதில் முகமது அணிந்திருந்த டி-ஷர்ட்டைக் கண்டுபிடிப்பதை முக்கியமானதாகக் கருதிய போலீஸார், குளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். ஆயினும், டி-ஷர்ட் கிடைக்கவில்லை.
வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ டி-க்கு மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசு சார்பில் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அதையொட்டி, சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு விசாரணை நடத்திவந்தனர். தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர், ஆதில் முகமது மரணம் தொடர்பாக அன்று அவனை அழைத்துச் சென்ற 14 வயது சிறுவன் தற்போது போலீஸாரால் பிடிக்கப்பட்டிருக்கிறான். ஆபத்தை ஏற்படுத்தும் இடத்துக்கு அழைத்துச் சென்றது, தடயங்களை அழித்தது உள்ளிட்ட பிரிவுகளில் சிறுவனின்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.