பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்துவைக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகளாக சாதிய இழிவுகளால் அடிமைபடுத்தப்பட்டு, அடைப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தர்களுக்கு இந்தியாவில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என நாடு முழுவது இருந்தும் பெரிய தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமரே, கடந்த 2011ம் ஆண்டு நாடுமுழுவதும் காங்கிரஸ் கூட்டணி அரசு நடத்திய கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடுங்கள். ஓபிசி மக்கள், பட்டியல் மக்கள், பழங்குடி மக்களின் உரிமைகளை மறுக்காதிர்கள் என பேசினார். இந்த நிலையில் கணக்கெடுப்பை நடத்தச் சொல்லி ஒன்றிய அரசை கேட்டு அழுத்துபோன பிகார் அரசு, தானே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வெற்றிகரமாக முடிக்க இருந்த நிலையில், கணக்கெடுப்பை நிறுத்த பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில், கடந்த ஜனவரி 7ம் தேதி முதல்கட்ட கணக்கெடுப்பு தொடங்கியது. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெற்று வரும் கணக்கெடுப்பில் பொருளாதார நிலை, சாதிப்பிரிவு, துணை சாதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிற போது, கணக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகின.
அந்த வழக்கு விசாரணையில், ‘‘தகவல் பாதுகாப்பு, மாநில அரசுக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து இறுதி தீர்ப்பு வரும் வரை கணக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும். நாடாளுமனறத்திற்கு தான் கணக்கெடுப்பை நடத்த அதிகாரம் உள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பீகார் சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படும் என்ற அரசின் முடிவு, தனிநபர் தகவல் பாதுகாப்பு முறையாக பின்பற்றப்படுமா என கேள்வி எழுப்புகிறது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். ஜூலை 7ம் தேதி வரை விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது’’ என பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு மே 15ம் தேதி நிறைவு பெற்று இந்தமாத இறுதியில் முடிவுகள் சட்டமன்றத்தில் வெளியிடப்படும் என பீகார் முதல்மைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ‘‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் தடை போடுகிறார்கள் எனத் தெரியவில்லை முடிவுகளை வெளியிடுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதே புரியவில்லை. இதை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.