பீகார் அரசின் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் என்றும், மக்கள் தொகைக்கு இணையாக வழங்க வேண்டும் என்றும் பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோரிக்கை எழுந்தது.
அதேபோன்று, தற்போது ஓபிசி பட்டியலில் உள்ள ஒரு சில சமுதாயத்தினர் மட்டுமே, மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு பயன்களை அனுபவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு இந்த கணக்கெடுப்பு முக்கியம் என்றும் மத்திய அரசு உடனடியாக தேசிய அளவில் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பீகார் சட்டப் பேரவையில், இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் மீது மத்திய அரசு முடிவு எடுக்காத நிலையில், மாநில அளவில் சாதி வாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்த அந்த அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சாதி வாரிக் கணக்கெடுக்கும் பணியை பீகார் அரசு தொடங்கியது.
இந்நிலையில், இந்த கணக்கெடுப்பு பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று பாட்னா உயர்நீதிமன்றத்தில் அகிலேஷ் குமார் மற்றும் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாதி வாரிக் கணக்கெடுப்பு பணிகளை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த பணிகள் அனைத்தும் மத்திய அரசின் வரையறைக்குள் வரும் என்றும் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தவே கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், சாதி வாரிக் கணக்கெடுப்பு பணிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜுலை 3 தேதி நடைபெற உள்ளது.
newstm.in