கோவையில் மகள் போல பழகி சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கோடீஸ்வரி வீட்டில் இருந்து 2 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற டிப்டாப் பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்..
சிக்கன் குழம்பு கொடுத்து 2 கோடி ரூபாய் பணத்தையும், 100 சவரன் நகைகளையும் அள்ளிச்சென்றதாக போலீசாரால் தேடப்படும் காஸ்ட்லி பெண் வர்ஷினி இவர்தான்..!
கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனி பகுதி சேர்ந்த கோடீஸ்வர பெண் மணி ராஜேஸ்வரி . 60 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவரிடம் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்ற பெண், ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக அறிமுகமாகி மகள் போல பழகி உள்ளார். அந்த அன்பில் மயங்கிய ராஜேஸ்வரி அவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்து உள்ளார்.
அண்மையில் வர்ஷினி, தனக்கு தெரிந்த புரோக்கர்கள் என அருண்குமார், சுரேந்தர், பிரவீன் ஆகிய மூவரை ராஜேஷ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்து உள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டிற்கு நிலப் புரோக்கர்களுடன் சென்ற வர்ஷினி, ராஜேஸ்வரி சாப்பிடுவதற்காக ஸ்பெஷலாக சிக்கன் குழம்பு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட பின்னர் ராஜேஷ்வரி தூங்கச்சென்று விட்டார். காலையில் விழித்து பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்து இரண்டரை கோடி ரூபாய் பணம் 100 பவுன் நகை ஆகியவை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கொள்ளை குறித்து ராஜேஷ்வரி கோவை ராமநாதபுரம் காவல் நிலையித்தில் புகார் அளித்தார். கடந்த சில தினங்களாக தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த அருண்குமார், சுரேந்திரன்,பிரவீன் ஆகிய புரோக்கர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 33 லட்ச ரூபாய் பணம் மற்றும் 31 பவுன் நகையை மீட்டனர். சிக்கன் குழம்பு சப்ளையர் வர்ஷினியையும் அவரது கூட்டாளி நவீன்குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ராஜேஸ்வரிக்கு தந்த சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது.