துணை வேந்தர்களை ஆளுநர்கள் தான் நியமிக்க வேண்டும் என யுஜிசியில் எந்த விதியும் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வரும் நிலையில் தமிழக அரசை சீண்டும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
‘திமுக கூறும் திராவிட மாடல் நிர்வாகத்தை நான் பாராட்ட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். முதலில், நிர்வாகத்தில் அப்படி எந்த ஒரு மாடலும் கிடையாது. திராவிட மாடல் என்பது ஒரு அரசியல் கோஷம். அவ்வளவுதான். அது ஒரு காலாவதியான மாடல்’ என்று பேசினார்.
அதுமட்டுமல்லாமல் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக கூறினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா 14 ஏப்ரல் 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2022 ஏப்ரல் 28ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு, மே 5ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா தொடர்பாக அனைத்து கேள்விகளுக்கும் போதுமான பதில் அளித்துள்ளோம். சட்டத்துறை செயலாளர் ஆளுநரின் செயலாளருக்கு 7 முறை தொடர்ந்து கடிதம் எழுதி இருக்கிறார்.
யுஜிசி விதிகளுக்கு முரணாக மசோதா உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லுவது சரியான காரணமாக தெரியவில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர்கள் தான் நியமிக்க வேண்டும் என யுஜிசியில் எந்த விதியும் இல்லை. தற்போது சித்தா பல்கலைக்கழகத்திற்கு மாதவரம் பால் பண்ணையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒன்றிய அரசிடம் இருந்து 7,000 தடுப்பூசிகள் வந்துள்ளன. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர் வசதிக்காக 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக மே 15 முதல் 25 வரை உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மருத்துவ கட்டமைப்புகளுக்காக ரூ.1136 கோடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.