புதுடெல்லி: சூடானில் சிக்கித் தவித்த இந்திய பழங்குடி மக்களை, ஆபத்துக்களுக்கு மத்தியில் மத்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது.
சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆபரேஷன் காவேரி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை இந்திய ராணுவமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து பத்திரமாக மீட்டு வருகின்றன.
சூடானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை அதன் துறைமுக நகரான போர்ட் சூடானுக்கு அழைத்து வந்து பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வந்து பிறகு அங்கிருந்து அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் நாடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், போர்ட் சூடானில் இருந்து சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல் ஃபஷிர் என்ற நகரில் கர்நாடகாவைச் சேர்ந்த ஹக்கி பிக்கி என்ற பழங்குடி மக்கள் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் 71 பேர் அங்கு இருப்பதை அறிந்து அவர்களை அங்கிருந்து சாலை மார்க்கமாக அழைத்து வருவதற்காக இந்திய தூதரகம் இரண்டு பேருந்துகளை அனுப்பி உள்ளது. போர் சூழலுக்கு மத்தியில் 3 இரவு 4 பகல் பயணித்து அவர்கள் போர்ட் சூடான் வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஜெட்டாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதனை அடுத்து இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்தியா வந்ததும் அவர்கள் கூறியதாவது: “நாங்கள் 2 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டோம். அதில் ஒரு பேருந்து பாதி வழியில் பழுதடைந்து நின்றுவிட்டது. அது குறித்து இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்தினோம். அவர்கள் மாற்றுப் பேருந்தை அனுப்பினார்கள். மிகுந்த அச்சத்துக்கு மத்தியில் பயணித்து நாங்கள் போர்ட் சூடான் வந்தடைந்தோம். சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், எங்களை மீட்க முயற்சி எடுத்த கர்நாடக அரசுக்கும், இந்திய அரசுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.