பல்கிரெட்: செர்பியாவில் பள்ளிக்கூட மாணவர் ஒருவர் வகுப்பறையில் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர்.
செர்பியாவின் தலைநகரான பல்கிரெட் விரகார் பகுதியில் விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவர் புதன்கிழமையன்று திடீரென வகுப்பறையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில், அந்த மாணவருடன் பயின்ற 8 மாணவர்கள் பலியாகினர். மேலும், பள்ளிக் காவலர் ஒருவரும் உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரே போலீஸாரிடம் இது குறித்த தகவலை தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அந்த மாணவரை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்ட மாணவர் இன்னும் பல மாணவர்களைக் கொல்ல திட்டமிட்டிருதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் ஒரு மாதத்துக்கு முன்னரே தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கிறார். வகுப்பறையின் வரைப்படம், கொல்லப்பட வேண்டிய குழந்தைகளின் பட்டியலையும் அவர் தயாரித்திருக்கிறார். திட்டமிட்டு அந்தச் சிறுவன் துப்பாக்கிச்சூட்டை நடத்தி இருக்கிறார். கொல்லப்பட்டவர்களில் சிறுமிகளே அதிகம். 7 சிறுமிகளை அவர் கொன்றிருக்கிறார். ஓர் ஆசிரியர் மற்றும் 6 மாணவர்கள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மாணவரை நாங்கள் கைது செய்தபோது அவர் பயத்துடனும், பதற்றத்துடனும் இருந்தார்” என்று தெரிவித்துள்ளனர்.
செர்பியாவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதாகவே நடைபெறும். இந்த நிலையில் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் செர்பியா மக்களை அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு செர்பியா முழுவதும் இரங்கல் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.