டாப் கியரில் எகிறப் போகும் ECR சாலை… சென்னை டூ தூத்துக்குடி… இன்னும் ஒரே வருஷம் தான்!

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள நீண்ட வழித்தடம் வர்த்தக மற்றும் சுற்றுலா ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களை இணைப்பதால் ஏற்றுமதி, இறக்குமதிக்கு பெரிதும் பயனளிக்கிறது. இந்த வழியாக சீரான ரயில் போக்குவரத்தை கொண்டு வரவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் நிறைவேறும் பட்சத்தில் கிழக்கு கடலோரப் பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.

சென்னை டூ தூத்துக்குடி

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வருவாய் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 32 (NH-32)ஐ அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (NHAI) மும்முரம் காட்டி வருகிறது. பல்வேறு பகுதிகளாக பிரித்து பணிகள் நடந்து வருகின்றன.

சாலை விரிவாக்கத்தில் சிக்கல்

ஆனால் போதிய நிதி இல்லாதது, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்ற காரணங்களால் பணிகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாகவும் சாலை விரிவாக்கப் பணிகள் தாமதமாகின. கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை பார்த்தால் ஒட்டுமொத்த பணிகளில் வெறும் 17 சதவீதம் மட்டுமே முடிவடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் முதல் சிதம்பரம்

தற்போது கடலூர் மாவட்டம் கடவச்சேரி முதல் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் வரையிலான 55 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கான செலவு மட்டும் 2,661.75 கோடி ரூபாய். விழுப்புரம் முதல் சிதம்பரம் வரையிலான பணிகள் 65 சதவீதம் முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவு பெறும் என்கின்றனர். இதேபோல் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து மயிலாடுதுறை – காரைக்கால் இடையிலான சாலை விரிவாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்

மேலும் கொள்ளிடம் ஆற்றின் மீது நான்கு வழிச் சாலை உடன் கூடிய மேம்பாலம் கட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளும் படிப்படியாக முடிக்கப்பட்டு வரும் ஜூலை 2024ல் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒப்பந்ததாரர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து, அதற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நிதின் கட்கரி தகவல்

முன்னதாக மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த பிரம்மாண்ட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். இதன் பணிகள் அடுத்த ஆண்டு நவம்பரில் முடியும் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.