தமிழ்நாட்டின் DravidianModel-தான் இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக Formula என்றும் இதனை மெய்ப்பிக்கும் நமது ஈராண்டு சாதனைகளை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாடுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இரண்டாண்டு ஆட்சியை பொறுத்தவரை திமுக மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒரு பக்கம் இலவச திட்டங்கள், வளர்ச்சி பணிகள் என நல்ல விமர்சனங்களையும் இன்னொரு பக்கம் சட்ட ஒழுங்கு, மது விற்பனை, கமிஷன், ஊழல், சொத்து பட்டியல் என மோசமான விமர்சனங்களுக்கும் திமுக அரசு ஆளாகியுள்ளது. இ
தற்கு மத்தியில் திமுக ஆட்சி, கழக ஆட்சி என்கின்ற வார்த்தைகளை பயன்படுத்தி வந்த திமுக முதல் முறையாக தனது ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பிரச்சாரம் செய்வது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் திமுக ஆட்சி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். ” திராவிட மாடல் ஒன்று இல்லவே இல்லை என்றும் காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் விமர்சித்துள்ளார் ஆளுநர் ரவி. மேலும், கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் வெடிப்பு, விஏஓ படுகொலை போன்றவை நடக்கும்போது தமிழ்நாடு எப்படி அமைதிப்பூங்காவாகும் என்றும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள மடல்;
பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டு மக்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை, நிறைவேற்றியிருக்கும் திட்டங்களை, இரண்டாண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் இதயத்தில் அவற்றைப் பதியச் செய்திடும் கடமை, உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. அதனால்தான், திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. மே 7-ஆம் நாள் சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன்.
திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது. இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும். திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.