ஜெய்ப்பூர்: திருவண்ணாமலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி ஏடிஎம் மையங்களில் ரூ 72 லட்சம் கொள்ளை போன சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அதிகாலை திருவண்ணாமலை , போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
கேஸ் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ 72 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
கர்நாடகா, ஹரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஹரியானாவை சேர்ந்த தஸ்லிம்கான் (35) என்பவரையும் கைது செய்தனர். இவர்தான் கொள்ளையர்கள் ஏடிஎம்மில் புகுந்து கொள்ளையடித்த போது அவர்கள் பயன்படுத்திய காரை ஓட்டினார்.
இந்த வழக்கு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி இன்றைய தினம் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். ஹரியானா- ராஜஸ்தான் எல்லையில் ஆரவல்லி மலைப்பகுதியில் இருந்த பாழடைந்த கட்டடத்தில் ஆசிப் ஜாவேத் என்பவரை தமிழக போலீஸார் கைது செய்தனர்.
இவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் கைது செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கார்கள், 1 கன்டெய்னர் லாரி, ரூ 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கைதான 8 பேரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்திருந்தனர்.
இன்று கைதான ஆசிப் ஜாவேத் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர். இவரை தமிழகத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் காவல் துறையினர் சமர்ப்பிப்பர். இவர் ஏற்கெனவே வேறு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பதை போலீஸார் விசாரிப்பர் என தெரிகிறது. தீரன் பட பாணியில் துப்பாக்கி முனையில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.