’தொழிற்சங்க சொத்து விஷயத்தில் வைகோவின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது’ – சு.துரைசாமி விளக்கம்

திருப்பூர்: தொழிற்சங்க சொத்து விஷயத்தில் வைகோவின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளதாக, மதிமுகவின் மாநில அவைத்தலைவர் சு.துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக மதிமுகவின் மாநில அவைத்தலைவராக இருக்கும் சு.துரைசாமி, திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1960-ம் ஆண்டு மே 2-ம் தேதி நடந்த கூட்டத்தில் சங்கத்தலைவராக கோவை செழியன், பொதுச்செயலாளராக நானும், பொருளாளராக காட்டூர் கோபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். கடந்த 63 ஆண்டுகளாக தொழிற்சங்கத்துக்கு பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன்.

1960-ம் ஆண்டு தொடங்கி 1993-ம் ஆண்டு வரை, ஏறத்தாழ 45 இடங்களில் பஞ்சாலைகள் முன்பாகவும், தலைமை நிலைய அலுவலகத்துக்கான இடம், கட்டிடம் உள்ளிட்டவை வாங்கி உள்ளோம். வாங்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் சங்கத்தின் பொதுச்செயலாளர் சு.துரைசாமி என்றும், கட்டிடம் வாங்கப்பட்ட நேரத்தில் யார் சங்கத்தின் பொருளாளராக இருந்தார்களோ அவர்கள் பெயரும் இணைந்துதான், சங்கத்துக்கு வாங்கி உள்ளோம். ஒரு கட்டிடம் கூட எனது பெயரில் தனிப்பட்ட முறையில் வாங்கப்படவில்லை.

சங்கத்தின் நடவடிக்கைகளுக்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால், சங்கத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் கையொப்பம் இட்டு தான் எடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் யாரும் எடுக்க முடியாது. தொழிற்சங்கத்தின் இந்த அடிப்படைகூட வைகோவுக்கு புரியவில்லை. இது தொடர்பாக கடந்த ஆண்டு மே 17-ம் தேதி பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதில் சங்கத்தின் சொத்துகள் எப்படி வாங்கப்பட்டது என தெளிவாக குறிப்பிட்டு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அந்த கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு, சங்கத்தின் சொத்தை நான் எடுத்துக்கொண்டதாக சொல்வது தவறானது.

எங்கள் சங்கத்தில் கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில், சங்கத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவதால், எனது பெயரில் ’சு.துரைசாமி அறக்கட்டளை’ என்று ஆரம்பிக்கப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு தலைவராக நானும், துணைத்தலைவராக மு.தியாகராஜனும், மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.சீனிவாசன், ஏ.பழனிசாமி, பி.கோவிந்தசாமி, மு.பழனிசாமி, எஸ்.எஸ்.காளியப்பன், பி. ஈஸ்வரன் என 8 பேர் உள்ளோம். அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் மில் தொழிலாளியாக இருந்து தொழிற்சங்கத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இந்த விவரமும் தெரியாமல் அறக்கட்டளை சொத்துகளை சு.துரைசாமி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் என வைகோ பேசுகிறார். பெரியார் மாளிகை என்றால் அது பெரியாருக்கு சொந்தமா? ராஜீவ்காந்தி மருத்துவமனை அது ராஜீவ்காந்திக்கு சொந்தமானதா? யார் பெயரையும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த அமைப்பின் சட்டதிட்டங்கள் தான் கட்டுப்படுத்தும். இன்று என் மீது குற்றம் சாட்டும் வைகோ, சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தின் பெயரை வை.கோபால்சாமி என்ற பெயரில் தான் பத்திரப்பதிவு செய்துள்ளார். அப்போது பொருளாளராக இருந்த மு.கண்ணப்பன் பெயரை கூட சேர்க்கவில்லை.

அதன்பின்னர் கடந்த 15 ஆண்டு காலமாக பதவியில் இருந்த மாசிலாமணி, எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் இருந்தனர். இவர்கள் யாரும் காசோலை புத்தகத்தை பார்த்தது கூட கிடையாது. தொழிற்சங்க சொத்துவிஷயத்தில் வைகோ குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. நான் முன் வைக்கும் விமர்சனத்துக்கு நேரடியாக வைகோ பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கும் அரசியல் நிலையை பார்த்து, பெரியார், அண்ணாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய இயக்கம் திமுக மட்டுமே.

மதிமுகவை நம்பி கடந்த 30 ஆண்டுகளாக வந்த பலர் பெருவாரியாக இன்றைக்கு சென்றுவிட்டநிலையில், இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களும் ஏமாற்றப்படாமல் இருக்கவே, அரசியல் எதிர்காலத்துக்கு உகந்த வகையில் மதிமுகவை, திமுகவோடு இணைக்க வேண்டும் என்று சொல்கிறேன். மதிமுகவே இன்றைக்கு ஆள் இல்லாத நிலையில் தான் உள்ளது. வைகோவின் பேச்சாற்றல், நினைவாற்றலை யாரும் குறை சொல்ல முடியாது. வைகோவின் மகன் என்பதைத் தவிர, துரைவைகோவுக்கு வேறு எந்த தகுதியும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.