சென்னை: கோடை மழையின் குளுமையை முழுமையாக அனுபவிப்பதற்கு உள்ளாக, சுட சுட ஒரு செய்தியை அறிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி சுட்டெரிக்க போகிறது என்ற செய்திதான் அது.
வெயில் பட்டால் சருமத்துக்கு இவ்வளவு பாதிப்பா?
நடப்பாண்டு கோடைக்காலம் வழக்கத்தை விட அதிகமாக அனலைக் கக்கி வருகிறது. பருவநிலை மாற்றம்தான் இதற்கு முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெயில் மிக உக்கிரமாகவே இருக்கிறது. காலை 9 மணிக்கு கூட மதியம் 12 மணி உச்சிவெயிலுக்கு நிகராக அடித்து துவசம் செய்கிறது சூரியன்.
குறிப்பாக, சென்னை, வேலூர், மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கோடையின் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அங்கு இப்போதே 102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலே வெயில் பதிவாகி வருகிறது.
இந்த வெயிலால் முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வாட்டி வதைத்த இந்த கொடும் வெயிலுக்கு ஆறுதலாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து. இன்றைக்கு கூட, சில பகுதிகளில் கோடை மழை பெய்து மண்ணை குளிர்வித்துள்ளது.
இந்நிலையில், கோடை மழை தந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிப்பதற்கு உள்ளாகவே, நாளை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்க போகும் மிரட்டலான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது வானிலை ஆய்வு மையம். நாளை (மே 4) தொடங்கும் இந்த அக்னி நட்சத்திரம் மே 28-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது அடிக்கும் வெயிலை விட பல மடங்கு வெப்பம், அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் இருக்கப்போகிறது. அதாவது 103 – 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலே வெயில் பதிவாகும் எனக் கூறப்படுகிறது. இதனால் முடிந்த அளவுக்கு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், அக்னி நட்சத்திரத்தில் இருந்து தப்பிக்க அடிக்கடி இளநீர், பழச்சாறு, நீர் மோர் உள்ளிட்டவற்றை பருகுமாறும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.