அபுதாபி நாட்டில் இந்த மாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலீட்டு மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பினராயி விஜயனின் மருமகனும், கேரள மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான முஹம்மது ரியாஸ், மாநில தொழில்த்துறை அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அபுதாபி நாட்டுக்குச் செல்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரடியாக அந்த மனுவை ஆய்வு செய்தார். பின்னர், முதல்வர் கலந்துகொள்ளும் அளவுக்கு அந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல எனக்கூறி பினராயி விஜயனின் அபுதாபி பயணத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அனுமதி மறுத்தது. அதே சமயம், அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தடை இல்லை என மத்திய வெளியுறவுத்துறை கேரளத்துக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்கட்டியிருந்தது.
கேரள மாநிலம் மட்டுமல்லாது, சத்திஸ்கர், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்ககுக்கும் அபுதாபி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளியுறவுத்துறை அலுவலகம் மறுத்ததை தொடர்ந்து அபுதாபி செல்ல அனுமதி கேட்டு பினராயி விஜயனின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்தை நாடி உள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சரகத்தின் முடிவில் தலையிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து அபுதாபி செல்லும் திட்டத்தை பினராயி விஜயன் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.