திருவள்ளூர் நகராட்சியில் 16-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் இந்திரா பரசுராமன். இவரின் மகன் கலைவாணன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் கவுன்சிலர் பரசுராமன் மகன் கலைவாணனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் இடையே சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் கலைவாணன் தனது மருந்தகத்துக்குச் சென்றிருக்கிறார். திடீரென நான்குக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் கத்தியுடன் மருந்தகத்துக்குள் நுழைந்து, கலைவாணனை தலை, உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டிவிட்டுத் தப்பித்திருக்கின்றனர்.
அதையடுத்து அருகிலிருந்தவர்கள் கலைவாணனைமீட்டு எதிரிலுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கலைவாணன் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்
பட்டப்பகலில் தி.மு.க கவுன்சிலரின் மகன் வெட்டப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த திருவள்ளூர் நகர காவல்துறையினர் தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும்பொருட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.