சான் பிரான்சிஸ்கோ: இன்றைய டிஜிட்டல் உலகில் ஜிமெயில் துவங்கி பெரும்பாலான தளங்களின் சேவையை பெற பயனர்கள் தங்களது கணக்கின் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டி உள்ளது. அதில் சில பயனர்கள் என்ன பாஸ்வேர்ட் கொடுத்தோம் என்பதையே மறந்து போய் இருப்பார்கள். சிலர் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலான பாஸ்வேர்டை பயன்படுத்தி வருவார்கள். உதாரணமாக ‘pass@123, abcd1234’ என இருக்கும். இருந்தாலும் இதன் செக்யூரிட்டி (பாதுகாப்பு) என்பது கேள்விக்குறி தான். சைபர் குற்ற ஆசாமிகள் ரேண்டமாக இந்த எளிய பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக்-இன் செய்து தங்கள் கைவரிசையை காட்டி விடுவார்கள். இந்த இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூகுளின் Passkeys (பாஸ்கீஸ்) உதவுகிறது.
அதாவது பயனர்கள் எதிர்கொண்டு வரும் பாஸ்வேர்ட் சார்ந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, செக்யூரிட்டி ரீதியாகவும் உறுதி அளிக்கிறது பாஸ்கீஸ். பாஸ்வேர்ட் இல்லாத இணைய உலகை பயனர்கள் கட்டமைக்க உதவுகிறது கூகுள். இருந்தாலும் இதில் சில நிபந்தனைகள் உள்ளன.
அது என்ன என்றால் பயோமெட்ரிக் முறையில் பயனரின் கைரேகை, முக அங்கீகாரம் அல்லது ஸ்க்ரீன் லாக் என எளிய வகையில் பயனர்கள் தங்கள் கணக்கை அக்செஸ் செய்ய உதவுகிறது பாஸ்கீஸ். கிட்டத்தட்ட பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை இப்போது எப்படி பயன்படுத்தி வருகிறார்களோ அது போலவே பாஸ்கீஸ் இயங்குகிறது.
பாஸ்கீஸ்?
வழக்கமான பாஸ்வேர்ட் பயன்பாட்டு முறைக்கு மாற்றாக இருப்பதோடு பயனர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் நோக்கில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘பாஸ்கீஸ் பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பானது. அதனால் இனி வரும் நாட்களில் பயனர்கள் தங்களது செல்லப்பிராணிகளின் பெயர், பிறந்தநாள் அல்லது password123 போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை’ என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போதைக்கு இது கூகுள் கணக்குகளில் மட்டும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் பாஸ்கீஸ் தொடர்பாக கூகுள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
பாஸ்கீஸை பயன்படுத்த பயனர்கள் மேனுவலாக அனுமதி கொடுக்க வேண்டி உள்ளது. இதற்காக பயனர்கள் தங்களது கூகுள் கணக்கில் ப்ரொபைல் படத்தை க்ளிக் செய்ய வேண்டும். அதில் ‘மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் > செக்யூரிட்டி > பாஸ்கீஸ்’ தேர்வு செய்து இதனை பயன்படுத்தலாம். அதை செய்தால் பயனர்களின் பாஸ்வேர்டை உள்ளிட சொல்கிறது கூகுள். அதன் மூலம் பாஸ்கீஸ் அம்சத்தை பயனர்கள் ஆக்டிவேட் செய்யலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் தளங்களில் இந்த சேவையை பயனர்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
We’ve started rolling out support for passkeys that let users sign in to our products with a fingerprint, a face scan or a screen lock PIN. Starting today, this will be available as an option for Google Account users. https://t.co/wBSIqAfiCe
— Sundar Pichai (@sundarpichai) May 3, 2023