பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை – பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பிஹாரில் கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு தடை விதிக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.வி.சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.

நேற்றைய விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான தினு குமார், “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. எனவே, இவ்விஷயத்தில் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது” என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.கே. ஷஹி, “மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும், சமூகங்களின் நிலையை உயர்த்துவதற்குமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பிஹார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பிலும் சிறுபான்மையினர் மற்றும் எஸ்சி, எஸ்டி சமூகத்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே சாதி வாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. மாநில சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இரு முறை தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்க அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இருந்தும் ஏன் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.