தனியார் பேருந்து சாலையில் வேகமாக பயணித்த போது, உள்ளே இருந்த இளம்பெண் வளைவில் திரும்பும்போது தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண், சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் பேருந்தில் பணிக்கு சென்று திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பினார். அப்போது, பேருந்தின் முன்புறம் படிக்கட்டு அருகே நின்று கொண்டு வந்தார்.
பேருந்து ஆட்டையாம்பட்டி சந்திரா தியேட்டர் என்ற பகுதியில் உள்ள சாலை வளைவில் வேகமாக திரும்பியது. அப்போது கௌசல்யா நிலை தடுமாறி பேருந்தில் இருந்து வெளியே விழுந்தார்.
சாலையோரம் ஜல்லிக்கற்கள் அதிகம் இருந்த நிலையில், படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கௌசல்யா உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த காவல்துறையினர் கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கவுசல்யாவின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
கௌசல்யா தனியார் பேருந்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in