மும்பை: சரத் பவார் தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியதால் மகா விகாஸ் அகாதி கூட்டணி உடையாது என்று அக்கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதையடுத்து, அம்மாநில அரசியலில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. சரத் பவாரின் இந்த முடிவை ஏற்க மறுத்துள்ள கட்சியினர், அவர் மீண்டும் தலைவராக வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனினும், அவர் தனது நிலையில் உறுதியாக இருந்து வருகிறார்.
இதையடுத்து, கட்சியின் தலைவராக சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே தேர்வு செய்யப்படுவார் என்றும், முதல்வர் வேட்பாளராக அஜித் பவார் அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மகா விகாஸ் கூட்டணியின் தலைவராக சரத் பவார் தொடருவார் என்றும் கூறப்படுகிறது. கூட்டணியின் பெரிய கட்சி என்ற அடிப்படையில், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அஜித் பவாரை முன்கூட்டியே அறிவித்து களம் காண அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சரத் பவார் விவகாரம் தொடர்பாக முதல்முறையாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா(உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே, “தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகியதால் மகா விகாஸ் அகாதி கூட்டணி உடையாது. சர்வாதிகாரத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும். அதை யாராலும் தடுக்க முடியாது. நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் அல்ல; ஆனால் சர்வாதிகாரத்துக்கு எதிரானவன்” என தெரிவித்துள்ளார்.