மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது – கடற்றொழில் அமைச்சர்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அதற்கான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் மக்கள் பிரதிநிதிகள் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில்சார் முன்னேற்றங்களுக்காக 1650 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்திருப்பதாகவும், அதேபோன்று வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதார உதவிகளுக்காக சீனா 1500 மில்லியன் ரூபாய்களை வழங்க முன்வந்துள்ளதுடன் இந்தியாவும் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

எமது மக்களுக்கு கிடைக்கின்ற இவ்வாறான வாய்ப்புக்களை பகிர்ந்தளிப்பதில் அரசியல் பாகுபாடு கிடையாது எனவும் தெரிவித்தார்.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அச்சுறுத்தலாக காணப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக ஆராயப்பட்டதுடன், குறித்த விடயம் தொடர்பாக விசேட கூட்டம் ஒன்றினை நடத்தி விரிவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகள், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் தொடர்பான விவகாரம், நீர்ப்பாசணம் சார்பான ஒழுங்குபடுத்தல்கள், கிளிநொச்சி நகர அபிவிருத்தி திட்டம் போன்ற பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டதுடன், சில விடயங்களுக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியும் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.