கேரளாவில் மசூதி ஒன்றில் நடைபெற்ற இந்து முறையிலான வீடியோவை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆலப்புழா மாவட்டத்தில் சேரவல்லி முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் சரத் சசி – அஞ்சு அசோக் தம்பதிக்கு நடைபெற்ற திருமணம் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த திருமணம் முழுக்க முழுக்க இந்து சடங்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
பெண்ணின் குடும்பத்தினர் ஏழை என்பதால் மசூதியை நாடினர். மசூதி நிர்வாகம் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுத்து மசூதியிலேயே திருமணம் நடத்த அனுமதியும் வழங்கியது.
புரோகிதர் சடங்குகள் நடத்தி திருமணம் செய்து வைத்தார். பின்னர் ஆயிரம் பேருக்கு சைவ உணவு பறிமாறப்பட்டது. இந்த திருமணம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்றது.
‘காம்ரேட் ஃபரம் கேரளா’ என்ற ஐடியில் ‘மற்றொரு கேரளா ஸ்டோரி’ என கேப்ஷனிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
கிறிஸ்தவ பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறி ‘கேரளா ஸ்டோரி’ என்ற படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ட்வீட் கவனம் பெற்றுள்ளது.
newstm.in