மஞ்சுவிரட்டில் காளை முட்டி பலியான காவலர்; உடலை தூக்கிச் சுமந்த எஸ்.பி – நிவாரணம் அறிவித்த முதல்வர்!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கல்லூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மஞ்சுவிரட்டில் காளைகளை வரிசையாக அவிழ்த்துவிடாமல், ஆங்காங்கே அவிழ்த்துவிட்டதால், பார்வையாளர்களை நோக்கி தாறுமாறாக ஓடிய காளைகள், பார்வையாளர்கள் பலரை முட்டித் தூக்கி வீசின. அங்கு பாதுகாப்புப்பணியிலிருந்த மீமிசல் காவல் நிலையக் காவலர் நவநீதகிருஷ்ணன், பார்வையாளர்களை, திடலுக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்.

உயிரிழந்த காவலர்

அப்போது, யாரும் எதிர்பாராதவகையில், சீரிப்பாய்ந்துவந்த ஒரு காளை, கண் இமைக்கும் நேரத்தில், காவலர் நவநீதகிருஷ்ணனின் மார்பில் முட்டித் தூக்கி வீசியது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த காவலர், பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல், கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்தார். 63 பேர் வரையிலும் காயமடைந்தனர். உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறந்த காவலரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். உயிரிழந்த நவநீதகிருஷ்ணனுக்கு சபரி என்ற மனைவியும், மிதுன்சக்கரவர்த்தி (8), கீர்த்திவாசன் (5) ஆகிய இரு மகன்களும் இருக்கின்றனர். சபரி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணி செய்து வருகிறார். அறந்தாங்கியில் நவநீதகிருஷ்ணனின் இறுதிசடங்குகள் நடைபெற்றன.

நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குவந்த, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவலரின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, எஸ்.பி வந்திதா பாண்டே, காவலர்களுடன் சேர்ந்து இறந்த நவநீதகிருஷ்ணனின் உடலைச் சுமந்து சென்றார். எஸ்.பி தலைமையில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன், 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அதே பகுதியில் எல்.என் புரம் மயானத்தில், காவலரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பாதுகாப்புப்பணியிலிருந்த காவலரின் உயிரிழப்பு, அறந்தாங்கி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.