இம்பால்: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூரில் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், சேவை நிறுவனங்களை தமிழர்கள் நடத்தி வருகின்றனர். ஏராளமான வர்த்தக நிறுவனங்களையும் தமிழர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே பெரும் மோதல் வெடித்தது. மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து கோரி போராடுவதால் மோதல் வெடித்தது. மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த மோதல் வெடித்தது. மோரே நகரிலும் புதன்கிழமை இரவு இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.
மோரே நகரில் பல வீடுகள், தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இரவு நேர ஊரடங்கும் பல மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.