சென்னை: தமிழக மாவட்டங்களிலேயே மதுரையில்தான் மழைப் பொழிவு குறைந்துகொண்டே வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2022-ம் ஆண்டு நிலவிய வானிலை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையை புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் காலநிலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலம் வாரியான வானிலை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, தமிழகத்தில் 2022ஆம் ஆண்டில் சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது. 1901ம் ஆண்டிற்குப் பிறகு அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளில் 2022ம் ஆண்டு 24வது இடத்தைப் பிடித்துள்ளது. மழைப் பொழிவை பொறுத்தவரையில் 3 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமான அளவும், 13 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழையும், 22 மாவட்டங்களில் இயல்பான அளவு மழையும் பதிவாகியுள்ளது.
ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாகி உள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் போன்ற மாதங்களில் இயல்வான அளவு மழை பெய்து உள்ளது. பிப்ரவரி, மார்ச், செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகி உள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரையில் மதுரையில் ஆண்டு மழைப் பொழிவு கணிசமான அளவு குறைந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கணிசமான மழை அளவு அதிகரித்து வருகிறது. மதுரையில் மழைப் பொழிவு குறைந்து வருவதற்கான காரணம் குறித்து சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறுகையில், “மதுரையில் மழைப் பொழிவு குறைந்து கொண்டே வருவது இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
மதுரையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், நீர் நிலைகள் எந்த அளவுக்கு உள்ளது, வயல்வெளிகளின் அளவு, கட்டிடங்களின் எண்ணிகை, பசுமை பரப்பு உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்துதான் இதற்கான காரணத்தை கண்டறிய முடியும். ஒரு குறிப்பிட்ட காரணத்தால்தான் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்று கூற முடியாது” என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் 1901 – 2021 காலத்திற்கான ஆண்டு மழைப்பொழிவு போக்கின் அடிப்படையில் தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில் மட்டும் மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டிலும் இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். மாவட்ட அளவில் இதன் தாக்கத்தைத் தணிக்கவும், தகவமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.