சென்னை: நகைச்சுவை நடிகராக கடைசி மூச்சு வரை பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த மனோபாலாவின் திடீர் மறைவு பெயருக்காக அல்ல, உண்மையாகவே தமிழ் சினிமாவுக்கு பேரிழப்புத் தான்.
சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் மனோபாலா நடித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசனின் இந்தியன் 2, நடிகர் விஜய்யின் லியோ, ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 உள்ளிட்ட பெரிய படங்களிலும் மனோபாலா நடித்துள்ள நிலையில், அவர் நடித்த காட்சிகள் அந்த படங்களில் இடம்பெறுமா? அல்லது மாற்றப்படுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
திரண்டு வந்த திரை பிரபலங்கள்: ஒருவரின் மரணத்தில் தான் அவர் எந்தளவுக்கு வாழ்ந்து சென்றிருக்கிறார் என்பதை அறிய முடியும் என்பார்கள். மனோபாலா பலருடன் எந்த அளவுக்கு நட்பு பாராட்டி வந்திருக்கிறார் என்பதையும் அவர் எந்தளவுக்கு வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் என்பதையும் அவரது இறுதி நேரத்தில் நன்றாக அறிந்துக் கொள்ள முடிகிறது.
அரசியல் தலைவர்கள், சினிமாவின் மூத்த நடிகர்கள், சினிமாவின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த நிலையில், நடிகர் விஜய் நேற்று மாலை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்.
மேலும், நடிகர்கள் விஜய்சேதுபதி, பழம்பெரும் நடிகர் சிவகுமார், சமுத்திரகனி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், லோகேஷ் கனகராஜ், எச். வினோத் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
லியோ முதல் சந்திரமுகி 2 வரை: மினி பட்ஜெட் திரைப்படமாக இருந்தாலும் சரி ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களாக இருந்தாலும் சரி யார் டேட் கேட்டாலும் உடனடியாக கொடுத்து விடுவார் மனோபாலா.
விஜய்யின் லியோ, கமல்ஹாசனின் இந்தியன் 2, பி. வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2, அரண்மனை 4, பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்துள்ளார் மனோபாலா.
சில படங்களில் அவரது போர்ஷன் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், சில படங்களில் இன்னமும் கொஞ்சம் பேட்ச் வொர்க் இருப்பதாகவும், நடித்த படங்களுக்கு டப்பிங் செய்யாமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மனோபாலா நடித்த 20க்கும் மேற்பட்ட படங்களின் நிலை என்ன ஆகும் என்றும் அவருக்கு பதிலாக இன்னொரு நடிகரை அந்த ரோலில் வைப்பார்களா? மனோபாலாவுக்கு பதிலாக மிமிக்ரி கலைஞர்களை வைத்து டப்பிங் செய்வார்களா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
நிச்சயம் நடிகர் மனோபாலாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக மாறியுள்ளது உண்மை தான் என சினிமா பிரபலங்கள் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.