மல்யுத்த வீராங்கனைகளின் #MeToo போராட்டம்… சர்ச்சை கருத்துக்கு பிறகு சந்தித்த பிடி உஷா!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசியுள்ளார் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. இருப்பினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் இன்று 11 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, இன்று டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.

முன்னதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் குறித்து பிடி உஷா பேசியது பெரும் சர்ச்சையானது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம் என்றும் இது இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும் என்றும் கூறியிருந்தார் பிடி உஷா. பிடி உஷாவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த பிடி உஷா, தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், முதலில் தான் ஒரு விளையாட்டு வீராங்கனை என்றும் பின்னர்தான் நிர்வாகி என்றும் கூறியதாக மல்யுத்த வீராங்கனையான பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். தங்களுடன் இருப்பதாகவும் தங்களுக்கு தேவையான உதவியை செய்வதாகவும் பிடி உஷா உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முயற்சிப்பதாகவும், தங்களுக்கு நீதி கிடைக்க உதவுவதாகவும் பிடி உஷா தெரிவித்ததாகவும் மல்யுத்த வீராங்கனை பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். பிடி உஷா மல்யுத்த வீரர் வீராங்கனைகளை சந்தித்து பேசிய போட்டோக்களும் விடியோக்களும் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.