கோடை வெப்பத்தில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 வட மாநிலங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் எனவும், பின்னர் மே 14-க்கு மேல் வெப்பம் மீண்டும் உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாட்டின் வடமேற்கு அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு நல்ல மழையும், இமயமலை பகுதிகளில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆங்காங்கே பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மத்தியப் பகுதிகளுல் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும், கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கங்கை சமவெளி கொண்ட மேற்கு வங்க மாநிலம் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று ஆங்காங்கே காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு மழை எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களை பொறுத்தமட்டில் கடலோர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.