மிரட்டலையும் தாண்டி.. இந்தியா வந்தார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ.. கையை பிசையும் தீவிரவாதிகள்

கோவா:
தீவிரவாதிகளின் கடும் எச்சரிக்கையையும் மீறி இந்தியா வந்திருக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ. அவர் இந்தியாவுக்கு வந்திருப்பதால் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் கடும் கோபம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கோவாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜ்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்த அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவின் கோவா மாநிலத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

நல்லுறவு இல்லை:
இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ளதால் இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்காது எனக் கூறப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான உறவு நிலவவில்லை. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது முதலாகவே, இந்தியா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது பாகிஸ்தான். மேலும், ஐநா உள்ளிட்ட சர்வதேச தளங்களில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியதால், அந்நாட்டுக்கு கடுமையான பதிலடியை இந்தியா தந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாது என்றே கூறப்பட்டது.

மிரட்டல் விடுத்த தீவிரவாதிகள்:
ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக பாகிஸ்தான் கடந்த மாதம் அறிவித்தது. மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்ற பின்னர், பிரதமர் மோடியையும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே காஷ்மீரில் ராணுவ வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பூட்டோவுக்கும் எச்சரிக்கை:
பாகிஸ்தான் அமைச்சர் இந்தியா வருவதாக கூறியதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர். தீவிரவாதிகளை பொறுத்தவரை, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். எனவேதான், இப்படியொரு பயங்கர தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றினர். மேலும், இந்தியா செல்லக்கூடாது என பாகிஸ்தான் தீவிரவாத இயங்கங்களிடம் இருந்தும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் எண்ணம் என்ன?
இந்நிலையில், இந்த மிரட்டல், எச்சரிக்கை எல்லாவற்றையும் மீறி பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ கோவாவுக்கு இன்று மதியம் வருகை தந்தார். தனி விமானத்தில் வந்து இறங்கிய அவரை இந்திய வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் வரவேற்றனர். தற்போது கடுமையான பஞ்சத்திலும், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ள பாகிஸ்தான், இந்தியாவுடன் நட்புறவை புதுப்பித்துக் கொள்ள இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை ஒரு வாய்ப்பாக பார்ப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.