இம்பால்: மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. மணிப்பூருக்கு இவ்வளவு தமிழர்கள் சென்றது ஏன்? எப்போது? எப்படி? விரிவாக பார்ப்போம்.
பொதுவாக தமிழர்கள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவிலும், மும்பையின் தாராவி பகுதியிலும் அதிகளவில் வசித்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மூளையில் அமைந்து உள்ள மாநிலமான மணிப்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ் கலாச்சாரத்தை மறக்காமல் வாழ்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
நம்பமுடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் மோரே என்ற நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றாக வசித்து வருகிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றால் அது மணிப்பூர் என்பதையே மறந்து ஏதோ, தஞ்சாவூர், மதுரை, கோவை, நெல்லை, கடலூரில் இருப்பதை போன்ற உணவு ஏற்படும்.
அந்த அளவில் அவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பற்றிப்பிடித்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை மணிப்பூரில் நடத்திக்கொண்டு உள்ளனர். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த மக்களின் சொந்த மாநிலமாக மணிப்பூர் மாறியது எப்படி? என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். அது 60 ஆண்டுகளுக்கு முந்தைய பர்மா தமிழர்களின் ரத்த சரிதத்துடன் தொடர்புடையது.
இன்று மியான்மர் என்று அழைக்கப்படும் அப்போதைய பர்மா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த மக்களை கூலித் தொழில் செய்வதற்காக இலங்கை, கேரளாவின் மூணாறு, பர்மா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆங்கிலேயர்கள் அழைத்து சென்றார்கள். அவர்களும் அங்கு வியர்வையோடு ரத்தத்தையும் சிந்தி உறவுகளை பிரிந்து கஷ்டப்பட்டு உழைத்தனர்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டான 1948 ஆம் ஆண்டு மியாமருக்கும் சுதந்திரம் கிடைத்தது. அந்த நாட்டின் இயற்கை வளங்கள், சூழல் தமிழர்களுக்கு பிடித்துப்போனது. சுதந்திரம் கிடைத்த பிறகும் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பாமல் பர்மாவிலேயே தங்கிவிட்டனர். அவர்களை பின்பற்றி பல தமிழர்கள் பர்மாவுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களின் சொந்த நாடாகவே பர்மா மாறி இருந்தது.
இப்படியே நாட்கள் செல்ல கடந்த 1962 ஆம் ஆண்டு அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு பர்மாவில் நடந்தது. அதுதான் ராணுவ ஆட்சி. மியான்மர் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியவுடன் அங்கு வசித்த தமிழர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் துன்புறுத்தினர். இப்போது ரோஹிங்கியா முஸ்லிம்களை விரட்டி அடித்ததைபோன்று அப்போது அங்கு வசித்து வந்த தமிழ் மக்களை விரட்டியடிக்கத் தொடங்கினார்கள்.
இதனால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தங்கள் சொத்து, வீடு, உடைமைகளை எல்லாம் மியான்மரிலேயே விட்டுவிட்டு அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறினர். தமிழர்கள் உட்பட இந்திய மக்களை மியான்மரில் இருந்து மீட்பதற்காக ஜவஹர்லால் நேரு கப்பல் ஒன்றையும் அனுப்பினார். அது அவர்களை மீட்டு வந்தது. அவர்களுக்கு இந்திய அரசு அகதிகள் முகாம்களை கொடுத்து அடைக்கலம் அளித்தது.
பல ஆண்டுகளாக பர்மாவில் வாழ்ந்து அதன் சூழல், உணவுக்கு பழகிப்போன தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வாழ்வதில் சிக்கல் இருந்தது. இதனால் 12 தமிழ் குடும்பங்கள் பர்மாவுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தார்கள். 1964 ஆம் ஆண்டு அவர்கள் 2 குழுக்களாக சுபாஷ் சந்திர போஸின் ஆசாத் ஹிந்த் படை பர்மாவுக்கு சென்ற வழியை தேர்ந்தெடுத்து சென்று இருக்கிறார்கள்.
முதல் குழுவில் சென்ற 7 குடும்பங்களை மியான்மர் ராணுவம் கைது செய்தது.
அனைவரின் கண்களையும் ஒரு மாத காலத்துக்கு கட்டி வைத்து துன்புறுத்தியது. அதன் பிறகு அவர்கள் இந்தியாவில் உள்ள ஒரு நகரின் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ராணுவத்திடம் பிடிபட்டு திக்கற்ற நிலையில் இருந்த தமிழர்களுக்கு அந்த நகரமே பின்னால் சொந்த ஊரானது. அதுதான் மணிப்பூரில் உள்ள மோரே.
இவர்கள் அங்கு வாழ்வதற்கு காவல்துறை, அரசு தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் அதையும் கடந்து தற்போது வாழ்ந்து வருகிறார்கள். மற்ற 5 குடும்பங்களும் இந்த மோரே நகருக்கு அழைத்து வரப்பட்டன. தமிழர்களின் எண்ணிக்கை அந்த நகரத்தில் அதிகரித்துவிட்ட நிலையில், பல்வேறு உள்ளூர் இனக்குழுக்களின் தாக்குதள்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில்தான் நேற்றைய தாக்குதலும் அமைந்து உள்ளது.