12 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்தியா வரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி…!

லாகூர்,

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்றும் நாளையும் (மே 4,5) கோவாவில் நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.

அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று கோவா வர உள்ளார். கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பூட்டோ கோவா வர உள்ளார். கராச்சியில் இருந்து அவரது விமானம் புறப்பட்ட நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் அவர் கோவா வர உள்ளார்.

12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 2011 ஜூலை மாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஹினா ரபானி இந்தியாவுக்கு வருகை தந்தார். அதன்பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி யாரும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

12 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி சர்தாரி இந்தியா வருகை தர உள்ளார். இதனிடையே, சர்தாரி பயணம் மேற்கொள்ளும் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.