மாஸ்கோ: ரஷ்யா- உக்ரைன் இடையே ஒராண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி மேற்கொண்டதாகவும், அதிபரின் கிரெம்ளின் மாளிகையை தாக்குவதற்காக அனுப்பப்பட்ட 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
ட்ரோன்கள் வந்த நேரத்தில் அதிபர் புதின், கிரெம்ளின் மாளிகையில் இல்லை என்றும், அதிபர் புதினுக்கும், கிரெம்ளின் மாளிகைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
இது ரஷ்ய அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சியாக கருதுகிறோம் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
அதிபரின் கிரெம்ளின் மாளிகை அருகே இரண்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அவை கிரெம்ளின் மாளிகை அருகே விழுந்து எரியும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஆனால் ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. கிரெம்ளின் மாளிகை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கும், உக்ரைனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், கிரெம்ளின் மாளிகையை தாக்குவதன் மூலம் ராணுவ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது’’ என உக்ரைன் அதிபரின் செய்தி தொடர்பாளர் மிகாய்லோ போடோல்யாக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மாஸ்கோவில் அங்கீகாரம் அற்ற ட்ரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக மாஸ்கோ மேயர்செர்கே சோபியானின் தெரிவித்துள்ளார். அரசிடம் சிறப்பு அனுமதி பெறாமல் ட்ரோன்கள் பறக்கவிடுவதற்கு அனுமதிக்கப்படாது என்றார்.
உக்ரைன் அச்சுறுத்தல் இருந்தாலும், தலைநகர் மாஸ்கோவில் வரும் 9-ம் தேதி வெற்றி தின அணிவகுப்பு நிச்சயம் நடைபெறும் என அதிபரின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.