Cyclone: புயலால் தமிழகத்தில் மழை குறையும்… வெயில் அதிகரிக்கும்… வானிலை மையம் ஷாக் தகவல்!

கோடை மழை

சித்திரை மாதம் தொடங்கியது முதலே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் வரும் 6 ஆம் தேதி வளிமண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புயல்

மேலும் இந்த காற்று சுழற்சி 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதன் பிறகு 9ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த புயல் மத்திய வங்கக்கடல் நோக்கி வடக்கு திசையில் நகரக்கூடும் என்றும் இதனால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

புயல் எச்சரிக்கை மையம்

இந்நிலையில் புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் பி.செந்தாமரைகண்ணா, இந்த புயலால் தமிழகத்தை பொறுத்தவரை மழையில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்றும் 10 ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 9 ஆம் தேதி வடக்கே மத்திய வங்கக்கடலை நோக்கி நகரும் போது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

வெப்பம் அதிகரிக்கும்

இதன் பாதை மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மழையில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்று கூறியுள்ள அவர் இந்த புயலால் மழை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புயலின் தாக்கத்தால் வங்கக் கடலில் நிலவி வரும் ஈரப்பதம் முழுவதும் இழந்துவிடும் என்றும் இதனால் வருகிற 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

அக்னி நட்சத்திரம்

இதனிடையே அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. இது வரும் 29 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும். ஆனால் இடையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்பதால் அந்தக் காலக் கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.