சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் தரமான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதனையடுத்து ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என டீசருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் ரிலீஸ் தேதி:அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஜெயிலரில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. முத்துவேல் பாண்டியன் என்ற செம்ம மாஸ்ஸான கேரக்டரில் ரஜினி நடிக்க, அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினியின் கேரக்டர் மோஷன் போஸ்டர், ஜெயிலர் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது ரிலீஸ் தேதியை டீசருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து ஆகஸ்ட்டில் வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ்.
முக்கியமாக ஜெயிலர் ரிலீஸ் தேதியுடன், அசத்தலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதி டீசராக வெளியான இதில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிரட்டுகிறார் ரஜினி. அவர் மட்டும் இல்லாமல் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் ரெட்ரோ ஸ்டைலில் மாஸ் காட்டியுள்ளனர். அவர்கள் தவிர மற்ற கேரக்டர்களும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளனர். இதனால், ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.
இதனிடையே சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் மட்டுமே சுதந்திர தின ஸ்பெஷலாக ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாவதாக இருந்தது. மடோன் அஸ்வினி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில், ரஜினியின் ஜெயிலர் மாவீரன் படத்துக்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், முதன்முறையாக ரஜினி – சிவகார்த்திகேயன் இருவரது படங்களும் ஒரேநாளில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ரஜினி ரேஞ்சுக்கு சிவகார்த்தியனுடன் போட்டிப் போடலாமா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதுவும் சிவகார்த்திகேயனின் நண்பர் நெல்சன் தான் ஜெயிலர் படத்தின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மாவீரன் ரிலீஸ் தேதி மாற்றப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, கடலூர், கொச்சி, ஹைதராபாத் என பல இடங்களில் நடந்து வந்த ஜெயிலர் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்க நெல்சன் திட்டமிட்டுள்ளாராம். இதனால் தான் ஜெயிலர் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜெயிலர் ரிலீஸ் தேதியை டீசருடன் வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த ஜெயிலர் ரிலீஸ் தேதி டீசரை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதேபோல், டிவிட்டரிலும் ஜெயிலர் என்ற ஹேஷ்டேட் ட்ரெண்டாகி வருகிறது.