Manobala: தற்கொலைக்கு முயன்ற மனோபாலா… மைக் மோகன் மட்டும் இல்லைன்னா அவ்ளோ தான்

சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோபாலா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

விஜய், ஆர்யா, ஷங்கர், லோகேஷ் கனகராஜ் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து மனோபாலாவின் உடல் இன்று வளசரவாக்கம் பிருந்தாவன் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சினிமாவில் இயக்குநராக வலம் வந்த போது மனோபாலா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு முயன்ற மனோபாலா:தமிழ்த் திரையுலகில் முக்கியமான ஆளுமையான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக அவர் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. நாகர்கோவில் மருங்கூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மனோபாலா, பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

அப்போது முதல் பாரதிராஜாவின் முக்கியமான உதவி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்த மனோபாலா, இன்னொரு பக்கம் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அதேநேரம் இயக்குநர் கனவையும் விடாமல் துரத்திய மனோபாலா, 1982ல் ஆகாய கங்கை படத்தை இயக்கினார். கார்த்திக், சுஹாசினி நடிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வியடைந்தது.

அதனைத் தொடர்ந்து நான் உங்கள் ரசிகன் என்ற படத்தை இயக்கினார் மனோபாலா. இந்தப் படமும் தோல்வியானதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் மனோபாலா. அதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் இருந்தாராம். அப்படி இருந்த மனோபாலாவுக்கு நடிகர் மோகன் தான் சரியான நேரத்தில் கை கொடுத்து தூக்கியுள்ளார்.

மோகன் நடிப்பில் மனோபாலா இயக்கிய திரைப்படம் பிள்ளை நிலா. மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் இதுதானாம். தனது முதல் படமான ஆகாய கங்கை தோல்வியடைந்தாலும், மோகன் வாய்ப்புத் தேடி அலைந்த போது அவருக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார் மனோபாலா. அந்த நட்பின் காரணமாக மோகன் கால்ஷீட் கொடுக்க மனோபாலா இயக்கியத் திரைப்படம் தான் நான் உங்கள் ரசிகன்.

ஆகாய கங்கையை தொடர்ந்து இந்தப் படமும் தோல்வியடைந்ததால் மனச்சோர்விற்கு ஆளான மனோபாலா, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தாராம். இந்நிலையில், கலைமணியின் மூலம் முதல் வசந்தம் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு மனோபாலாவுக்கு அமைந்தது. ஆனால், மணிவண்ணன் இயக்கினால்தான் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் கருதியதால் அந்த வாய்ப்பும் பறிபோயுள்ளது.

இதனால் இன்னும் மோசமான மனோபாலா கண்ணதாசன் எழுதிய ‘கால மகள் கண் திறப்பாள் சின்னையா’ என்ற பாடலைக் கேட்டு தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டாராம். மேலும், திருச்சி வெக்காளி அம்மனுக்கு மிக உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்து மனம் உருக பிரார்த்தனையும் செய்தாராம் மனோபாலா. இந்நிலையில், மீண்டும் அழைத்த கலைமணி, மோகன் உனக்காக கால்ஷீட் தருவதாக சொல்லிவிட்டார். நீ தான் இயக்குநர் என சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

 Manobala: Late actor Manobala attempted suicide while working as a director

இதனால், ஆனந்த கண்ணீருடன் நெகிழ்ந்துப் போன மனோபாலா, மோகனுக்காக எழுதிய கதை தான் பிள்ளை நிலா. வாய்ப்புத் தேடிய காலத்தில் தனக்குப் பல்வேறு விதங்களில் உதவிசெய்த மனோபாலாவை மறக்காமல் மோகன் கால்ஷீட் கொடுத்துள்ளார். அப்போது மோகன் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாராம். அதனால், இரவு நேரங்களில் நடித்துத் தருகிறேன் என மோகன் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு பிள்ளை நிலா படத்தின் திரைக்கதையை மாற்றி எழுதினாராம் மனோபாலா. இந்தப் படம் வெளியான பின்னர் தான் மனோபாலா பிஸியான இயக்குநராக மாறியுள்ளார். 1980களின் இறுதியில் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த ரஜினியை தனது ஊர்க்காவலன் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார் மனோபாலா.

இன்னொரு பக்கம் கேப்டன் விஜயகாந்துக்கு அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார். ரஜினி, விஜயகாந்த் என நின்றுவிடாமல் சத்யராஜ், பிரபு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையும் மனோபாலா இயக்கியது குறிப்பிடத்தக்கது. 40 திரைப்படங்கள் உட்பட 16 சீரியல்களை இயக்கியுள்ள மனோபாலா, காமெடி நடிகராகவும் கலக்கியது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மனச்சோர்வு காரணமாக மனோபாலா தற்கொலை செய்திருந்தால், தமிழ்த் திரையுலகம் அப்போதே ஒரு நல்ல கலைஞனை இழந்திருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.