நடிகர் மனோபாலா மறைந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத திரையுலகம், நேற்றிரவு சரத்பாபுவும் மறைந்துவிட்டார் என்ற தகவல் பரவியதில் இன்னும் சோகத்தில் ஆழ்ந்தது. பின்னர் அது வதந்தி எனத் தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்டது.
தமிழ் சினிமாவின் 1970களின் கடைசி காலகட்டத்தில் அறிமுகமாகி, கதாநாயகனாக, நண்பனாக, வில்லனா, குணசித்திரமாக பன்முகம் காட்டி நடித்து வந்தவர் சரத்பாபு. ரஜினியின் ‘முள்ளும் மலரும்’ ‘வேலைக்காரன்’, ‘அண்ணாமலை’ உள்பட பல படங்களில் நடித்து, தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அவரை ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இப்படியொரு சூழலில் நேற்று அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தெலுங்கு, தமிழ் ஊடகங்களிலும் இதுதொடர்பாக செய்திகள் வெளியாகின. கமல், குஷ்பு உள்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சரத்பாபுவின் சகோதரர் மகன் ஆயுஷ் தேஜாஸ், உண்மை நிலையை விளக்கியுள்ளார்.
”அவர் முழுமையாக குணமடைந்து வருகிறார். அவரைப் பற்றி வெளியான தகவல்கள் பொய்யானவை. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம். ஐசியு பிரிவில் இருந்து அவரை வேறு அறைக்கு மாற்றியுள்ளனர். விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசுவார் என நம்புகிறேன்.” என்று தெரிவித்து இருக்கிறார். தெலுங்கு நடிகரும், சரத்பாபுவின் நண்பருமான கிரண், ‘சரத்பாபு சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்து வருகிறது’ என்று வீடியோவும் வெளியிட்டிருக்கிறார்.
விரைவில் நலம்பெற்று வாருங்கள் சரத்பாபு