சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
கேங்ஸ்டர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அக்டோபரில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை அட்லீ அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
தளபதி 68ல் விஜய்யின் புது முடிவு:பொங்கல் ரிலீஸில் களமிறங்கிய விஜய்யின் வாரிசு, ரசிகர்களின் வரவேற்போடு சூப்பர் ஹிட்டானது. இதனால், அவர் தற்போது நடித்து வரும் லியோ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் – லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம், ஆயுத பூஜை விடுமுறைக்கு ரிலீஸாகவுள்ளது.
இதனையடுத்து தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இயக்குநர் யார் என்று இன்னும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதேநேரம் அட்லீ தான் தளபதி 68 படத்தின் இயக்குநர் என முதலில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியாததால், அட்லீக்கு பதிலாக புதிய இயக்குநருடன் இணைய விஜய் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, விஜய்யின் தளபதி 68 படத்தை கோபிசந்த் மலினேனி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என தகவல்கள் தெரிவித்தன. இவர்களிலும் கார்த்திக் சுப்புராஜுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஒருவேளை இந்தக் கூட்டணி உறுதியானால் தளபதி 68 படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கலாம் என தெரிகிறது. ஆனால், தளபதி 68ல் விஜய் யாரும் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளாராம். எல்லோரும் அட்லீ அல்லது கார்த்திக் சுப்புராஜ் தான் சீனில் வருவார்கள் என எதிர்பார்க்க, விஜய்யோ இயக்குநர் தரணியுடன் இணைய முடிவு எடுத்துள்ளாராம்.
எதிரும் புதிரும், தில், தூள் திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குநர் தரணி, விஜய் நடிப்பில் கில்லி, குருவி படங்களை இயக்கியுள்ளார். 2004ம் ஆண்டு வெளியான கில்லி விஜய் கேரியரில் தரமான திரைப்படமாக அமைந்தது. ஆனால், 2008ல் ரிலீஸான குருவி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளாராம்.
இதனால், விஜய் – தரணி – வித்யாசகர் என மீண்டும் இந்த மூவர் கூட்டணி இணையும் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படமும் ஆக்ஷன் ஜானரில் விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் – தரணி இணையும் திரைப்படம் தளபதி 68 அல்லது அதற்கடுத்த படமாக இருக்கலாம் என்றும், இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் எனவும் கோலிவுட்டில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.