இந்தியா முழுவதும் நாளை சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவது குறித்து தமிழ்நாடு உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் எழக்கூடும் எனவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் நாளை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் வெளியாக உள்ளது. இது திரைப்படம் தமிழகத்தில் தென் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 27 தியேட்டர்களில் நாளை இந்தி மொழியில் மட்டும் வெளியாக உள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்தில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தி கேரளா ஸ்டோரி வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சர்ச்சைக்குரிய மற்றும் ஆட்சேபனைக்குரிய சுவரொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பவர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.